வியாழன், 3 ஜூன், 2010

புரட்சிக்கவி பாரதியார்

தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம் ;
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு,


நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ ? சொல்லீர் !
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவர்போல் இளங்கோவைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை;
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர் !

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
அதை வணங்கச் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளி யுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைபோல் கலைப்பெருக்கும்
கவிப் பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வாழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார் ;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைக்கண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.

சுத்ந்திரப் பயிர்

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் ? சர்வேசா ! இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம் ; கருகத் திருவுளமோ ?

எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது வடியத் திருவுளமோ?

ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

தர்மமே வெல்லுமெனும் சான்றோர்சொல் பொய்யாமோ ?
கர்மவிளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ ?

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ ?

எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு
கண்ணற்ற சேய்போற் கலங்குவதும் காண்கிலையோ ?

மாதரையும் மக்களையும் வன்கண்மையாற் பிரிந்து
காதலிளைஞர் கருத்தழிதல் காணாயோ

எந்தாய் ! நீ தந்த இயற் பொருளெ லாமிழந்து
நொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ ?

இன்பச் சுதந்திரம் நின் இன்னருளாற் பெற்றதன்றோ
அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ ?

வான்மழை யில்லையென்றால் வாழ்வுண்டோ ?
எந்தைசுயாதீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமோ?

நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய்
வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ

பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம் ?
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே ?

நின்பொருட்டு நின்னருளால் நின்னுருமை யாம்கேட்டால்,
என்பொருட்டு நீ தான் இரங்கா திருப்பதுவோ ?

இன்று புதிதாய் இரக்கின்றோமோ ? முன்னோர்
அன்று கொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ ?

நீயும் அறமும் நிலைத்திருத்தல் மெய்யானால்
ஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம் நீ நல்குதியே.

உறுதி வேண்டும்

மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினிலே யினிமை வேண்டும்;

நினைவு நல்லது வேண்டும் ;
நெருங்கினபொருள் கைப்படவேண்டும் ;

கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும் ;

தனமும் இன்பமும் வேண்டும் ;
தரணியிலே பெருமை வேண்டும்.


கண் திறந்திட வேண்டும்
காரியத்தி லுறுதி வேண்டும் ;

பெண் விடுதலை வேண்டும் ;
பெரிய கடவுள் காக்க வேண்டும் ;

மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்படவேண்டும்.

அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
துச்சமாக எண்ணி நம்மை தூறுசெய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயிலே கொணர்ந்து நண்பரூட்டு போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்தவேற் படைகள் போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக