திங்கள், 28 நவம்பர், 2011

உடைந்த எலும்புகளை இணைக்கும் ஒலி அலைகள்...!



ஒரு காலத்தில், குடும்பத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் இருந்தால் பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிய குடும்பத்திலுள்ள அனைவருமே ஆவலாய் இருப்பார்கள்.

ஆனால், அதைக் கண்டறியும் வழிதான் இருக்காது. ஆனால், காலப்போக்கில் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் என்னும் ஒலி அலைத் தொழில்நுட்பத்தின் மூலம் கர்ப்பம் தரித்த சில பல மாதங்களிலேயே வயிற்றில் வளரும் குழந்தை என்ன பாலினம் என்பது கண்டறியப்பட்டது.


அல்ட்ரா சவுண்ட் ஒலியினை (செவியுணரா ஒலி) 1950களில் ஸ்கொட்லாந்து நாட்டு மருத்துவர்கள்தான் ஒரு நோய் கண்டறியும் மருத்துவக் கருவியாகப் பயன்படுத்தினார்கள். பின்னர் அல்ட்ரா சவுண்ட் கருவிகள், ஓட்டை விழுந்த நுரையீரலை குணப்படுத்துவது, இரத்தக் கட்டுகளை உடைப்பது என சில நோய்களை குணப்படுத்தும் சிகிச்சைக் கருவிகளாக மாறிவிட்டன.

ஆனால், சமீபத்தில் அல்ட்ரா சவுண்ட் கருவியன்றை பயன்படுத்தி, உடைந்த எலும்புகளை மறுவளர்ச்சி மூலம் வளரச்செய்து குணப்படுத்தி, ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள் ஸ்கொட்லாந்து நாட்டு மருத்துவர்கள். எலும்பு முறிவுகளைக் குணப்படுத்தும் தற்போதுள்ள பிற மருத்துவ சிகிச்சை முறைகளைக் காட்டிலும் இந்த அல்ட்ரா சவுண்ட் கருவியானது 2 மடங்கு வேகமாக குணப்படுத்துகிறது என்பதை கண்டறிந்துள்ளார்கள்.

அல்ட்ரா சவுண்ட் ஒலியலைகள் ஏற்படுத்தும் அதிர்வுகள், உயிரணு அதிர்வுகளை ஏற்படுத்துவதன் மூலமே எலும்பு மறுவளர்ச்சியை தூண்டுகிறது அல்லது எலும்பு முறிவுகளை குணப்படுத்துகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். முறிந்த எலும்புகளை வளரச் செய்யும் இந்த ‘அல்ட்ரா சவுண்ட்’ கருவி, கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் படம் பிடிக்கும் ‘அல்ட்ரா சவுண்ட்’ கருவியை போன்றதுதான்.

ஆனால் இக்கருவியில் பயன்படுத்தப்படும் ஒலி அலை எண் முற்றிலும் வித்தியாசமானது என்பது குறிப்பிடத்தக்கது. முதலில், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்யும்போது வழவழப்பான திரவம் (ஜெல்) ‘ட்ரான்ஸ்டிசர்` என்னும் அல்ட்ரா சவுண்டு கருவியில் தடவப்படுகிறது. பின்னர் இந்த ‘ட்ரான்ஸ்டிசர்’ எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் சுமார் 20 நிமிடங்களுக்கு வைக்கப்படுகிறது.

இந்த சமயத்தில் இக்கருவியில் இருந்து வெளியாகும் ஒலியலைகள் தசைகளை ஊடுருவி அங்குள்ள உயிரணுக்களின் வளர்ச்சியை தூண்டுகிறது. இதனால் எலும்பு மறுவளர்ச்சி ஏற்பட்டு விரைவில் குணமடைகிறது. பொதுவாக, கணுக்கால் முறிவு ஏற்பட்டால் தற்போதுள்ள சிகிச்சை முறைகள் மூலம் அது குணமடைய, சுமார் 6 முதல் 12 மாதங்கள் வரை ஆகிறது. ஆனால், ஸ்கொட்லாந்து மருத்துவர் அங்குஸ் மெக்லீனிடம் கணுக்கால் முறிவு சிகிச்சைக்காக வந்த கேரி டென்ஹாமுக்கு வெறும் நான்கே மாதங்களில் கணுக்கால் முறிவு குணமானது.

அதாவது பிற சிகிச்சைகளுடன் ஒப்பிடுகையில் அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை 40 சதவீதம் வேகமாக எலும்பு முறிவை குணப்படுத்துகிறது என்கிறார் மருத்துவர் அங்குஸ். ஆனால், இந்த அல்ட்ரா சவுண்டு எலும்பு முறிவு சிகிச்சையில் ஒரேயரு சின்ன பிரச்சினை இருக்கிறது. அதாவது பிற சிகிச்சைகளுடன் ஒப்பிடுகையில் இந்த சிகிச்சைக்கு கொஞ்சம் அதிக செலவு பிடிக்கும்.

ஆனால் இது தற்காலிகமான பிரச்சினைதான். ஏனென்றால் இனிவரும் காலங்களில் அல்ட்ரா சவுண்ட் கருவிகள் சிறியதாகவும், விலை குறைந்ததாகவும் மாறிவிடும் என்பதால், எலும்பு முறிவுக்கு எல்லோரும் அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை செய்யும் காலம் வெகு தூரத்தில் இல்லை.


நன்றி தமிழ்க்கதிர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக