திங்கள், 21 நவம்பர், 2011

ஹிட்லர் தற்கொலை செய்யவில்லை .,!?


சர்வாதிகாரி ஹிட்லர் 1945ஆம் ஆண்டில் பெர்லின் நகரில் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் அவர் ஆர்ஜென்டீனாவில் இறுதி நாட்களை கழித்த நிலையில் இயற்கை மரணம் எய்தியதாகவும் புதிய புத்தகமொன்று உரிமை கோருகிறது.


தென் அமெரிக்காவில் வயதாகி ஹிட்லர் இறந்தமைக்கான சான்றுகள் தனக்கும் மேற்படி ஆய்வில் பங்கேற்ற சிமொன் டங்ஸ்டனுக்கும் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரித்தானிய ஊடகவியலாளரான கெரார்ட்வில்லியம்ஸ் ஞாயிற்றுக்கிழமை "ஸ்கைநியூஸ்' ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.


1945ஆம் ஆண்டு பெர்லின் நகரிலுள்ள நிலக்கீழ் அறையொன்றில் ஹிட்லர் இறந்ததாக பல வரலாற்று அறிஞர்கள் உரிமை கோருகின்றனர்.


ஆனால் புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆவண ஆராய்ச்சிகள் மற்றும் இரசாயன பரிசோதனைகள் என்பவற்றின் மூலம் ஹிட்லர் தனது இறுதிக் காலத்தை ஆர்ஜென்டீனாவில் கழித்ததற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வில்லியம் கூறினார்.


"நாங்கள் வரலாற்றை மீள எழுத விரும்பவில்லை ஆனால் ஹிட்லர் தப்பிச்சென்றமை அலட்சியம் செய்யப்பட்டுள்ளதை எமக்கு கிடைத்த ஆதாரங்கள் வெளிப்படுத்துவதாக உள்ளது' என அவர் தெரிவித்தார்.


ஹிட்லரும் அவரது காதலி ஈவாபிறவுணும் இறந்தமைக்கான இரசாயன பரிசோதனை மேற்கொள்ளப்படாத நிலையில் அவர் பெர்லின் நகரில் தற்கொலை செய்து கொண்டதாக சம்பவத்தை நேரில் கண்டதாக கூறுபவர்களின் சோடிக்கப்பட்ட கதைகளை நம்புவது ஏற்புடையதல்ல என வில்லியம்ஸ் கூறினார்.


ஹிட்லரும் அவரது காதலியான ஈவாபிறவுணும் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜேர்மனியை விட்டு சென்று பாஸிஸவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த ஆர்ஜென்டீனாவில் தஞ்சமடைந்திருந்ததாக தெரிவித்த வில்லியம்ஸ் அந்நாட்டில் ஹிட்லர் 17 வருடங்கள் வாழ்ந்ததாகவும் அவருக்கு இதன்போது இரு பெண்குழந்தைகள் பிறந்ததாகவும் கூறினார்.


1962ஆம் ஆண்டு ஹிட்லர் மரணமடைந்ததாக வில்லியம்ஸ் மற்றும் சிமொன் டஸ்ட்டன் ஆகியோரால் கூட்டாக எழுதப்பட்ட கிரே வூல்ப் என்ற இந்த புதிய புத்தகம் கூறுகிறது.


ஹிட்லர் இறந்தமை குறித்து ஏற்கனவே வெளியிடப்பட்ட ஆவணங்களிலிருந்து தம்மால் பெறப்பட்ட சான்றுகளை ஏன் அமெரிக்க புலனாய்வு குழுவினர் அலட்சியம் செய்தனர் என மேற்படி புத்தகம் கேள்வி எழுப்பியுள்ளது.


பெர்லின் நிலக்கீழ் அறையில் கண்டுபிடிக்கப்பட்ட ஹிட்லரது என கூறப்படும் மண்டையோடு உண்மையில் இளம் யுவதியொருவருக்கு சொந்தமானது என்பது ஆய்வில் நிரூபணமாகியுள்ளமை தொடர்பிலும் வில்லியம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஹிட்லர் தனது காதலி ஈவாபிறவுணுடன் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜேர்மனியை விட்டு புறப்பட்டார். அவர் ஆர்ஜென்டீனாவில் 17 வருடங்கள் வாழ்ந்து 1962ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக