அவள் இதுவரை கொண்டிருந்த நம்பிக்கையை அந்த மரணம் பலி கொண்டிருந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆம், கடவுளாகக் கருதப்பட்டு, கடவுளாகக் கூறப்பட்டு, கடவுளாக வணங்கப்பட்டு, கடவுளாகவே காட்சிதந்து, கடவுளாக வரங்கள் தந்த சாயிபாபாவின் மரணம் அவளுக்குள் பல கேள்விகளை எழுப்பியிருக்க வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை, இந்தியாவில் அவதரித்து, மரணத்தைத் தழுவிய கடவுள்களின் எண்ணிக்கையில் சாயிபாபாவின் மரணம் ஒரு எண்ணிக்கையை அதிகரித்துவிட்டது. ஆனால், என் மகளுக்கு அது ஏமாற்றத்தைத் தந்திருந்தது. கிருஷ்ணனின் அவதாரமாக என் மனைவியால் அவளுக்கு வழங்கப்பட்டிருந்த சாயி கதையை அந்த மரணம் தகர்த்திருந்ததை என்னால் உணர முடிந்தது.
சாயிபாபாவிடம் தவம் இருந்து, வரம் பெற்றதாகக் கருதிய பக்தர்கள் கலங்கி நிற்க, சாயிபாபாவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் பெரும் முயற்சி எடுத்தார்கள். ஆனாலும், உலக மக்களை இரட்சிக்க வந்த கடவுளின் மரணம் தவிர்க்க முடியாததாகவே போய்விட்டது. மரணம், அவரையும் சாதாரண மனித ஆயுளுக்குள் கட்டுப்படுத்தி, சடலமாக வீழ்த்திவிட்டது. மரண தத்துவத்தை அவரது பக்தர்கள் ஆத்மீகத்தினுள் மறைக்க முயலுவார்கள். ஆனாலும், கடவுளுக்கும் மரணம் வருமா? என்ற என் மகளின் கேள்விக்கு விடை கொடுப்பவர்கள் யார்?
மரணம் உயிரோடு படைக்கப்படும் அனைத்துக்கும் உண்டு என்றாலும், படைத்தவனாய், காத்தவனாய், கடவுளாய் நம்பப்பட்ட சாயிபாபாவுக்கு எப்படி அது பொருந்தும்? என்ற கேள்வி எனக்குள்ளும் திரும்பத் திரும்ப எழுவதை என்னாலும் தவிர்க்க முடியவில்லை. எனக்கு மட்டுமல்ல… இன்னும் பலருக்கு அது குழப்பத்தை உருவாக்கக் கூடும்.
சாயிபாபா வைத்தியசாலை அமைத்தார், பல்கலைக்கழகங்கள் உருவாக்கினார், மடங்களை நிர்மாணித்தார், பல தர்ம காரியங்களை நிறைவேற்றினார் என்றெல்லாம் பலரும் சாயிபாபாவைப் புகழ்வதை நானும் ஆமோதித்திருக்கிறேன். ஆனாலும், அத்தனை காரியங்களையும் அவர் ஆற்றுவதற்குப் பின்னால் எத்தனை மர்மங்கள் இருந்திருக்கக்கூடும் என்ற கேள்வியையும் என்னால் தவிர்த்திருக்க முடியவில்லை. அவர் நிகழ்த்திய சித்து விளையாட்டுக்களால் மயங்கிய பக்தர்கள் வழங்கிய காணிக்கைகளில்தான் அவர் அத்தனையையும் செய்தார் என்ற உண்மையில் அவர் குறித்த கடவுள் தத்துவம் கலகலத்து நொருங்கிப் போவதை யார்தான் தடுக்க முடியும்?
இலட்சுமியின் கைகளிலிருந்து தங்கக் காசுகள் கொட்டும்போது, கிருஷ்ணரின் அவதாரமாக நம்பப்பட்ட சாயிபாபா பக்தர்களிடம் காணிக்கை பெற்றுத்தான் தனக்கு மாளிகையும், தங்கத்தில் சிம்மாசனமும், தர்ம காரியமும் நிகழ்த்த வேண்டும்? கடவுள்கள் தங்கள் கருணைக்குக் கூலி வசூலிப்பதை எந்தவகையில் நியாயப்படுத்த முடியும்? அப்படியானால், சாயிபாபா பக்தி வியாபாரம் நடாத்தினாரா?
ஈழத்தில் அவர்மீது நம்பிக்கை வைத்திருந்த இந்துக்களைக்கூட அவர் கை தூக்கிக் காப்பாற்றவில்லையே? வேண்டாம், ஒரு வார்த்தை அவர்களுக்காக உதிர்க்கவில்லையே? எல்லா இந்து மத பீடங்களைப் போலவே, எல்லா இந்து மத பீடாதிபதிகளைப் போலவே, அவரும் மௌனமாக ஈழத் தமிழினம் அழிக்கப்படுவதை வேடிக்கை பார்த்த போதே அவரது விம்பத்தில் பாதி நொருங்கிப் போய்விட்டது. மீதி மரணத்தால் விழுங்கப்பட்டு விட்டது.
புத்தரும், யேசுவும், நபிகளும் தங்களைக் கடவுளாக்கிக் கருணை வியாபாரம் செய்யவில்லை. அவர்கள் மகான்களாக, மதங்களின் ஊற்றுக்களாக, நம்பிக்கையின் வடிவமாக இப்போதும் வணங்கப்படுகின்றார்கள். அவர்களும் மரணித்தார்கள். ஆனாலும், மதத்தின் பெயரால் அவர்கள் கோடீஸ்வரர்களாக அரண்மனை சுகபோகங்களை அனுபவித்ததாக வரலாறு கூறவில்லை. அவர்கள் ஏழைகளின் காவலர்களாக, அவர்களுடன் கூடவே வாழ்ந்தார்கள். இந்திய தேசத்தின் புதல்வர்களில் ஒரு வேளை கூழுக்குத் தவிப்பவர்கள் கோடியைத் தாண்டியிருக்க, கூரையற்றவர்களாகத் தெருவில் வாழ்வைத் தொலைக்க, பார்ப்பனர்களின் வஞ்சகத்தில் சிக்கிப் பாரதத்தின் சொந்தக்காராகள் பஞ்சமாகளாகக் கேவலத்தில் சிக்கித் தவிக்க, கோடிகளில் புரள்பவர்கள் எப்படிக் கடவுள்களாகப் போற்றப்படத் தகும்?
எனது மகளைப் போலவே, இன்னும் பல குழந்தைகள் போலவே எனக்குள்ளும் பல கேள்விகள்… கடவுளுக்கும் மரணம் வந்ததனால் ஏற்பட்ட குழப்பங்கள் அடங்குவதற்குள், இன்னும் பல கடவுள்கள் அங்கே அவதரித்திருப்பார்கள்… அவர்களில் ஒரு சிலர் சாயிபாபா போல், இறுதிவரை கடவுளாகவே இருந்து, இறுதியில் இறந்து ஏமாற்றுவார்கள். சிலர், பரமானந்தர், நித்தியானந்தர் போல் பாதி வழியில் அம்பலப்பட்டு, பரிதாபமாகக் காணாமல் போவார்கள். ஆனாலும், ஈழத் தமிழ் இந்துக்களின் அவலங்கள் தீர இன்னொரு புத்தரோ, யேசுவோ, நபிகளோ அங்கே அவதரிக்கப்போவதில்லை.
நன்றி : இ.யு.தமிழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக