கல்கத்தாவின் தெருக்களில் ஒதுக்கப்பட்டிருந்த வறியவர்களையும், கவனிப்பாரின்றிக் கிடந்தவர்களையும் அரவணைத்து, அன்போடு தொண்டாற்றினார். தொண்டின் மறு உருவம் தெரசாவுக்கு 1979-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது...
அன்னை தெரசா என உலகம் முழுவதும் உள்ள மக்களால் பாசத்துடன் அழைக்கப்பட்ட இவரின் இயற்பெயர் எக்னஸ் கோஞ்சா பொயாஜியூ.
யுகோஸ்லோவியாவின் ஒரு பகுதியாக இருந்த மாசிலோனியா நாட்டில் உள்ள ஸ்கோப்ஜே நகரில் 1910-ஆம் ஆண்டு அன்னை தெரசா பிறந்தார். ஆகஸ்டு 26-ஆம் நாள் தெரசா பிறந்ததாகச் சில ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், தமது பிறந்த நாள் ஆகஸ்டு 27-ஆம் நாள் தான் என்பதைத் தெரசாவே உறுதிபடுத்தியுள்ளார்.
1922-ஆம் ஆண்டில் தனது 12-ஆவது வயதில், சொந்த ஊரில் பெற்றோர்களுடன் வாழ்ந்துகொண்டிருந்தபோது, வறுமையால் வாடுபவர்களுக்கு உதவுவதையே வாழ்க்கையாகக் கொள்ள வேண்டும் எனக் கடவுள் தனக்குக் கட்டளையிட்டதாக குறிப்பிடும் தெரசா, மற்றவர்களுக்காகத் தனது வாழ்வை ஒப்படைத்துக் கொள்ள முடிவு செய்து கொண்டார். தொண்டுக்காகப் பிறந்தவள் தான் என்பதை உணர்ந்த தெரசா, இந்தியாவின் கல்கத்தா நகரில் யுகோஸ்லோவியக் கிறித்துவ மிஷினர்கள் தொண்டாற்றுவதைக் கேள்விப்பட்டுத் தானும் பணியாற்ற விரும்புவதாகக் கூறினார். 1929-ஆம் ஆண்டு அவர் இந்தியாவுக்கு வந்தார். தொடக்கத்தில் அவர் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
1946-ஆம் ஆண்டு டார்ஜிலிங்கிற்குத் தொடர்வண்டியில் சென்று கொண்டிருந்த போது, சேரியில் அல்லல்படும் வறியவர்களுக்குத் தொண்டாற்ற வருமாறு தனது கனவில் கடவுள் அழைப்பதாக குறிப்பிடும் தெரசா, இந்தக் கடமையை நிறைவேற்றப் பள்ளியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதற்குக் கத்தோலிக்க மதத் தலைவர் போப் பாண்டவரிடம் இருந்து அனுமதி கிடைத்தது. உடனடியாக முதல் உதவி மருத்துவத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டு சேரி மக்களுக்குத் தன் தொண்டைத் தொடங்கினார்.
தெரசாவின் தொண்டு உள்ளத்தைக் கண்ட சகோதரிகள் ஒருவரைத் தொடர்ந்து ஒருவராக அவருடன் பணியாற்ற இணைந்ததால் கருணை இல்லம் (’மிஷினர் ஆப் சேரிடிஸ்’) என்னும் சமூகத் தொண்டு அமைப்பை உருவாக்கினார். இதனைத் தொடர்ந்து ஆதரவற்றவர்களுக்கு அன்னையாகத் தெரசா திகழ்ந்தார்.
சமூகத்தில் கைவிடப்பட்டவர்களான தொழு நோயர்களையும் சாவின் விளிம்பில் கிடந்த பிச்சை எடுப்பவர்களையும் தெரசாவும் அவரது அமைப்பினரும் தேடிப்பிடித்து உதவினர். மற்றவர்களால் மறுக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு தரும் இடமாகத் தெரசாவின் அமைப்பு விளங்கியது. தெரசாவின் கருணை உள்ளத்தால் உருவான அந்த அமைப்பு பல நாடுகளிலும் பரவியது. இதனால், தொண்டின் மறு உருவமான தெரசாவுக்கு 1979-ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1962-இல் அமைதி மற்றும் உலகப் புரிந்துணர்வுக்கான மகசேசே விருது, 1972-இல் பாப்பரசர் 23-ஆம் அமைதிக்கான பரிசு, காபிரியேல் விருது, 1973-இல் டெம்லெடொன் விருது, 1980-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பாரத் ரத்னா விருது, 1985-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மிக உயர் விருதான விடுதலைக்கான அதிபர் பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற அன்னை தெரசா 1997-ஆம் ஆண்டில் இறந்தார். இவரின் இறப்புக்குப் பின்னர் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் புனிதராக அறிவிக்கப்பட்டார்.
வாழ்ந்த போது ஒரு மனிதருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட முதல் பெருமை அன்னை தெரசாவுக்கு மட்டுமே உரியது. அவரைப் புகழ்ந்தவர்களிடம், "கடவுள் கை காட்டிய கடமையைச் செய்கிறேன்" என்று புன்னகையுடன் விடையளித்தார். கடவுள் இருப்பதாக கூறி தொழுபவர்கள் எல்லோருமே இவரைப் போலவே இருந்தால், உலகத்தில் சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் கொடுமைகள் நிகழாது! அன்னை தெரசாவின் வாழ்வில் இருந்து பாடம் கற்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக